உணவு டெலிவரி நிறுவன செயலிகள் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் ஆவின் பால் வீடு தேடி வரும்: அதிகாரி தகவல்

சென்னை: உணவு டெலிவரி நிறுவன செயலிகள் மூலம் பொதுமக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் ஆவின் பால் வீடு தேடி வரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் பொதுமக்களுக்கு முகவர்கள் மூலம் ஆவின் பால் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் பால் தற்போது வரை விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு ேமலும் எளிதாக கிடைக்கும் வகையில், தனியார் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் பால் பொருட்களை விநியோகம் செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவனம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஒரு சில நாட்களில் இதனை செயல்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே,  பொதுமக்கள் இந்த உணவு டெலிவரி நிறுவன செயலிகள் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்தால், ஆவின் பால் பொருட்கள் வீட்டிற்கு வந்து வழங்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இவர்களின் வசதிக்காக, ஆவின் பால் மற்றும் பால் சம்பந்தமான பொருட்கள் விற்பனை குறைவாக உள்ளது. மேலும், நோய் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஊரடங்கு அதிகரிக்கும் பட்சத்தில் ஆன்லைனில் எப்படி உணவு ஆர்டர் செய்து வாங்குகிறோமோ? அதேப்போன்று ஆவின் பால் மற்றும் நெய், ஐஸ்கிரீம், குலோப்ஜாம், குளிர்பானங்கள், மைசூர்பாகு, லஸ்ஸி, தயிர், மோர் போன்ற பொருட்களை உணவு டெலிவரி நிறுவனங்களின் செயலிகள் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். அவ்வாறு செய்தால், அந்த பொருட்கள் உங்களின் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும். அதற்கான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படலாம்,’’ என்றார்.

Related Stories: