காய்ச்சலை தவிர்த்து குழந்தைகளுக்கு தடுப்பூசி, விபத்து காயங்களுக்கு சிகிச்சை இல்லை: நோயாளிகளை திருப்பி அனுப்பும் அரசு மருத்துவமனைகள்

சென்னை: காய்ச்சலை தவிர்த்து மற்ற சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்காமல் தொடர்ந்து திருப்பி அனுப்பி வருவதால் நோயாளிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் மற்ற சிகிச்சைகள் அளிக்க மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது, காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்பை தவிர்த்து மற்ற பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். சர்க்கரை, ரத்த அழுத்தம் பிரச்னை தொடர்பாக வாரந்தோறும் வரும் நோயாளிகளுக்கு, மாத்திரை மட்டுமே கொடுத்து விட்டு அனுப்பி வருகின்றனர்.

அதே போன்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு 3 முதல் 4 மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போட பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு வருகின்றனர். தற்போது, அந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாது எனக்கூறி மருத்துவமனை ஊழியர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். தற்போது கொரோனா சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் டாக்டர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவில் உள்ள மருத்துவர்கள் இரவு, பகலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மற்ற சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை அந்த பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.

இருப்பினும் அவர்கள் வழக்கம் போல் சிகிச்சைக்கு வருவோரை பார்த்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று கூறப்படுகிது. ஆனால், தற்போது மருத்துவமனைகளில் எந்த சிகிச்சைகளும் அளிக்கப்படாது எனக்கூறி அவர்கள் திருப்பி அனுப்பபடுவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு மற்ற அவசர சிகிச்சைக்கு வருவோர்களுக்கு சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: