காய்கறி சந்தை, மருத்துவமனை நுழைவாயில்களில் உள்ள கிருமிநாசினி சுரங்கம் பயன்படுத்த தடை: சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

சென்னை: நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் உள்ள அமைக்கப்பட்ட கிருமிநாசினி சுரங்க பயன்பாட்டுக்கு தடைவிதித்து பொதுசுகாதாரத்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் ெகாரோனா  வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், காய்கறி சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பொருளை வாங்கி செல்கின்றனர். இதனால், கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து பொதுமக்கள் கூடும், காய்கறி சந்தைகள், மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை மூலம்  அமைக்கப்பட்டு வருகிறது.  

இந்த நிலையில் கிருமிநாசினி சுரங்கங்கள் அமைக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு தமிழக பொது சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து கிருமி நாசினிக்கு பயன்படுத்த தடை விதிக்குமாறு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொதுசுகாதாரத்துறை இயக்குனர் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் அதில், கிருமிநாசினி சுரங்கங்கள் தவறான பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

மேலும் கை கழுவும் பழக்கத்திலிருந்து மக்களை கிருமிநாசினி சுரங்கம் திசை திருப்புகிறது. கிருமிநாசினி சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் ஆல்ஹகால், குளோரின், லைசால் ஆகியவற்றை மனிதர்கள் மீது தெளிப்பது பயனற்றது. அது தீங்கு விளைவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து காய்கறி சந்தை, மருத்துவமனைகளில் கிருமிநாசினி சுரங்கங்களை ஏற்படுத்தவும், அதனை பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: