ரயில்வே பணிமனையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வென்டிலேட்டர் தயார் : கண்ணையா பேட்டி

சென்னை: ரயில்வே பணிமனையில் ₹10 ஆயிரத்தில் தரமான வென்டிலேட்டர் தயாரிக்கப்பட உள்ளதாக எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா கூறினார். சென்னை சென்ட்ரல் எஸ்ஆர்எம்யூ தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் கண்ணையா நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணிக்காக ரயில்வே பணிமனைகளில் 2 லட்சம் முககவசங்களை தயாரித்துள்ளனர். தற்போது, தினசரி 50 ஆயிரம்  முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன.  இதுவரை 10 ஆயிரம் லிட்டர் சானிடைசர்கள் உற்பத்தி செய்து மாநில அரசுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களை தனிமைப்படுத்த 3500 ஸ்லீப்பர் கோச்சுகளை 40 படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டாக மாற்றும் பணி 170 இடங்களில் நடந்து வருகிறது. இதில் ₹10 ஆயிரத்தில் வென்டிலேட்டர்கள் கபூர்தலா பணிமனையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, ஐசிஎம்ஆர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் ஐசிஎப், ஆர்சிஎப் பணிமனைகள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரிக்கப்படும். வடக்கு ரயில்வேயின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜெகதாஹரி பணிமனையில், முழு உடல் கவச மாதிரி தயாரிக்கப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆர் ஒப்புதல் கிடைத்தவுடன் பெரம்பூர் கேரேஜ் லோகோ பணிமனைகள் உள்பட பல பணிமனைகளில் சுமார் 1 லட்சம் முழு உடல் கவச மாதிகள் ஜூன் 30க்குள் தயாரிக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: