மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து கொடுக்க வேண்டும்: தயாநிதி மாறன் எம்பி பேட்டி

தண்டையார்பேட்டை: மூன்று வாரமாக வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களுக்கு தேவையான அன்றாட பொருட்களை தமிழக அரசு குழுக்கள் அமைத்து வீட்டிற்கே வந்து கொடுப்பதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தினார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வருமானமும் ஆதரவும் இல்லாமல் உள்ள வெளிமாநில கூலி தொழிலாளர்கள் ஏராளமானோர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகேயுள்ள மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முகக்கவசம், உணவு பொருட்கள், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர்.பின்னர், செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் எம்பி கூறியதாவது:அமைப்புசாரா தொழிலாளர்கள், தினக்கூலிகளுக்கு தேவையான உதவிகளை திமுகவினர் செய்து வரும் வரிசையில், சென்னையில் தங்கி வேலை செய்து வந்த வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டியதும் நமது மாநிலத்தின் கடமை.

தற்போதைய ஊரடங்கு உத்தரவால் தங்களுடைய ஊர்களுக்கும் செல்ல முடியாமல் வேலையும் இல்லாமல் தவித்து வரும் அவர்களை மாநகராட்சிப் பள்ளியில் அனைத்து வசதிகளுடன் தங்க வைத்து, மருத்துவ பரிசோதனைகளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஊரடங்கு உத்தரவு நீட்டிப்புக்கான அறிகுறிகள் இருப்பதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கு வந்து தருவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.  ஊரடங்கின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.

Related Stories: