ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கும் வாய்ப்பு குறைவு: இணையத்தில் வெளியிட தயாராகும் படங்கள்: திரைத்துறையினர் தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த 19ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. வரும் 14ம் தேதிக்கு பிறகும் தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஒருவேளை 14ம் தேதி ஊரடங்கு விலக்கப்பட்டாலும், சமூக விலகல் என்பது தொடர்ந்து அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.  கொரோனா வைரஸ் முற்றிலும் விரட்டி அடிக்கப்படும் வரை, மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் திறக்கப்படும் வாய்ப்பு இல்லை என்கின்றனர். வரும் டிசம்பர் மாதம் வரை அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது தமிழ் திரையுலகில் 50க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. 70க்கும் மேற்பட்ட படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் உள்ளது.

இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடவும் அல்லது டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பவும் தயாராகி வருகின்றனர். ஊடரங்கிற்கு முந்தைய வாரம் ஹரீஷ் கல்யாண், விவேக் நடிப்பில் வெளியான ஒரு படம், ஊரடங்கால் சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு எடுக்கப்பட்டது. தற்போது அப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதே பாணியை வேறு சில தயாரிப்பாளர்களும் பின்பற்ற ஆலோசனை நடந்து வருகிறது.

Related Stories: