கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆரவாரமில்லாத புனிதவெள்ளி வழிபாடு: பாதிரியார்கள் மட்டுமே பங்கேற்பு

சென்னை: கொ ரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் புனிதவெள்ளி வழிபாடுகள் ஆலயங்களில் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் நடந்தன.  புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி, இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் அவரது சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கும் ஒரு புனித நாளாகும்.  ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் நாளிலிருந்து தொடங்கி 40 நாட்கள் நோன்பு கடைபிடிப்பார்கள். இந்த காலத்தில் பெரும்பாலும் புலால் உணவை தவிர்ப்பது வழக்கம். இந்த 40 நாட்கள் நோன்புக்கு பிறகு புனித வெள்ளி கடைபிடிக்கப்படும். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளான அன்று ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், சிலுவைப்பாதை வழிபாடும், திருச்சிலுவை ஆராதனையும் நடைபெறும்.

 கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஈஸ்டர் விழாவின் கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமையாகும். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் நடைபெறும் புனித வெள்ளி வழிபாடுகள் இந்த ஆண்டு முழு ஊரடங்கு உத்தரவால் ஆரவாரமில்லாமல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.  அனைத்து ஆலயங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலயங்களில் பாதிரியார்கள் மட்டுமே பங்கேற்று புனித வெள்ளி திருவழிபாடுகளை நடத்தினர். இந்த வழிபாடுகள் சில ஆலயங்களின் ஏற்பாடுகளின்படி இணையதளங்களிலும், சில தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஔிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து புனித வெள்ளி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

Related Stories: