கேரளாவில் மீன்பிடிக்க அனுமதி அளித்தது போல் தமிழகத்திலும் மீன்பிடிக்க, விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும்: தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை

சென்னை: கேரளா அரசு சமூக இடைவெளிவிட்டு மீன்பிடிக்க அனுமதி அளித்தது போல் தமிழகத்திலும் மீன்பிடிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் செலஸ்டின், அந்தோணி ஆகியோர் மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் அரசு செயலாளர், மீன்வளத்துறை இயக்குநரிடம் கோரிக்கை மனுஅளித்தனர். இது குறித்து அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில்: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மீன்பிடித் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு இருக்கும் சிறுவியாபாரிகள், மீன்பதப்படுத்துவோர், கருவாடுவிற்பவர்கள், உள்நாட்டு மீனவர்கள் போன்றோர் வேலையிழந்து வீட்டில் முடங்கியுள்ளனர்.

மேலும் மீன் இனப்பெருக்கத்திற்கான மீன்பிடித்தடைக்காலமான ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை 61 நாட்கள் ஆகும். இத்தடைக் காலத்தில் மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்குவதுடன் மீன்பிடி தடைக்காலத்தை தற்காலிகமாக ஒரு மாதம் மாற்ற வேண்டும்.  மேலும் கேரளா அரசு சிறுமீன்பிடி கலன்களை பயன்படுத்தி சமூக இடைவெளிவிட்டு மீன்பிடிக்க அனுமதி அளித்தது போல் தமிழகத்திலும் நான்கு பேருக்கு குறைவாக சமூக இடைவெளிவிட்டு மீன்பிடி கலன்களை பயன்படுத்தி மீன்பிடிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories: