மத்திய அரசு அறிவித்த 15 ஆயிரம் கோடியில் தமிழகத்துக்கு 314 கோடி மட்டுமே ஒதுக்கீடு: தொடர்ந்து புறக்கணிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு 9 ஆயிரம் கோடி கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

* மாநிலங்களுக்கு மேலும் 15 ஆயிரம் கோடியை வழங்குவதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.

* இதில் தமிழகத்தின் பங்கு வெறும் 314 கோடிதான்.

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்கு மாநிலங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்துக்கு ரூ.314 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது. ஏற்கனவே, தமிழகம் ரூ.9 ஆயிரம் கோடி கேட்ட நிலையில் வெறும் ரூ.314 கோடியை அவசர கால நிதியாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்து இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நாட்டிலேயே கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ள நிலையில், அதற்கு அடுத்தப்படியாக  தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. எனவே, கொரோனா தடுப்புபணிகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.  இதற்காக, தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடி கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், மத்திய அரசு சார்பில் தேசிய பேரிடர் நிதியாக தமிழகத்துக்கு ரூ.510 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் எனக்கூறியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களான ராஜஸ்தானுக்கு ரூ.740 கோடி, உத்திரபிரதேசம் ரூ.966 கோடி, மத்திய பிரதேசம் ரூ.910 கோடி, குஜராத் ரூ.662 கோடி, ஓடிசா ரூ.802 கோடி, உத்தரகாண்டுக்கு ரூ.468 கோடி என நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  பாஜ ஆளும் மாநிலங்களில் பாதிப்பு குறைவாக உள்ள நிலையில், அங்கு நிதி அதிகமாகவும், தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதன் தாக்கத்தை உணராமல் இங்கு மட்டும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளது.  மேலும், கூடுதல் நிதி தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று அந்த கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் கொரோனா பாதிப்பில் 2வது இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் அவசர கால உதவி மற்றும் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடியை மாநிலங்களுக்கு வழங்குவதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. அதில், ரூ.4,700 கோடிதான் தற்போது, மாநிலங்களுக்கு நிதியாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. அந்த நிதியில் தமிழகத்துக்கு ரூ.314 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில், மீதமுள்ள ரூ.10,300 கோடி நிதியை மத்திய அரசே வென்டிலேட்டர், பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகளுக்கு வாங்கி ெகாடுக்கும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு பணி மற்றும் அதனால், ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்ய ரூ.9 ஆயிரம்  கோடி கேட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு சார்பில் பேரிடர் நிதி ரூ.510 கோடி மற்றும் அவசர கால நிதி ரூ.314 கோடி என மொத்தம் ரூ.824 கோடி மட்டுமே தந்துள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் பெரிய பாதிப்புக்குள்ளான நிலையில் மத்திய அரசு நிதி குறைத்து இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நிதி கொடுப்பதிலேயே மத்திய அரசு பாரபட்சம் காட்டும் நிலையில் மருத்துவ உபகரணங்கள் தமிழகத்துக்கு வாங்கி தருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இப்போது, ஒதுக்கிய இந்த நிதி, யானை பசிக்கு சோளப்பொறி என்ற கதையாகதான் உள்ளது. இந்த நிதியை கொண்டு கொரோனா தடுப்பு பணி மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி தான். மற்ற மாநிலங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு குறைவாக தான் நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது மத்திய அரசு ரூ.10,300 கோடியில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி தரப்போவதாக கூறியுள்ளது. மத்திய அரசு சார்பில் தமிழக அரசே கேட்ட நிதியை தராத நிலையில் எப்படி மருத்துவ உபகரணங்கள் வாங்கி தரப்போகிறது. அதிலும் கட்டாயம் மத்திய அரசு பாரபட்சம் தான் காட்டப்போகிறது.

Related Stories: