வாங்க வியாபாரிகள் வரவில்லை; ரூ6 கோடி தர்பூசணி அழுகும் அபாயம்: சீர்காழி பகுதி விவசாயிகள் வேதனை

சீர்காழி: ஊரடங்கு உத்தரவால் சீர்காழி பகுதியில் ரூ.6 கோடி மதிப்புடைய தர்ப்பூசணி பழங்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கரைமேடு, மணல்மேடு, புதுத்துறை, மண்டபம், திருவாலி, திருநகரி, நிம்மேலி, கீழ சட்டநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆண்டுதோறும் கோடை பயிரான தர்ப்பூசணி பயிரிடுவது வழக்கம். இங்கு பயிரிடும் தர்பூசணிகள் வெளி மாநிலத்திற்கும், வெளி மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. இப்பகுதி தர்பூசணிகள் நல்ல ருசியாக இருப்பதால் வியாபாரிகள் ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்வார்கள். இந்த ஆண்டு 600 ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்திருந்தனர்.

தற்போது அறுவடைக்கு தயாராகி வரும் இந்த நேரத்தில், கொரோனா வைரஸ் காரணமாக 144 ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் வியாபாரிகள் யாரும் தர்ப்பூசணி பழங்களை வாங்க வரவில்லை. இதனால் வயலிலேயே தர்ப்பூசணிகள் அழுக தொடங்கியுள்ளன. 600 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 20 ஆயிரம் டன் வரையிலான தர்ப்பூசணி பழங்கள் அழுகி சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.6 கோடி வரை விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னலக்குடி விவசாயி மாவளவன் கூறுகையில், 3 மாத கால பயிரான தர்ப்பூசணியை சீர்காழி பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் கோடை பயிராக சாகுபடி செய்து வருகிறோம்.

இப்பகுதி தர்பூசணி பழங்களுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் நல்ல மவுசு உண்டு. ஒசூர், கிருஷ்ணகிரி, மதுரை, சென்னை, கடலூர், கோவை மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கும் அதிகம் அனுப்பி வைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் வரவில்லை. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்னும் 10 நாட்கள் கடந்தால் தர்பூசணி பழங்களை ஆடு மாடுகளைக் கொண்டு மேய்க்க நேரிடும். விவசாயிகள் நலன் கருதி தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளை கண்டறிந்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: