அழகர்கோவிலில் குரங்குகளின் பசியை போக்கும் சமூகஆர்வலர்கள்

மதுரை:தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 22ம் தேதி முதல் அனைத்து கோயில்களும் மூடப்பட்டு பூஜைகள் மட்டுமே நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முற்றுலும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை அழகர்கோவில் மலையில் கீழ்தளத்தில் இருந்து, மேல்தளம் ராக்காயி அம்மன் கோயில் வரையுள்ள வனப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இந்த குரங்குகள் கடந்த 10 நாட்களாக உணவுப்பொருட்கள் கிடக்காமல் பசியால் பெரும் அவதிப்பட்டன. இதனையறிந்த சமூகஆர்வலர்கள் உணவு பொருட்கள் வழங்க வனத்துறையிடம் அனுமதி கேட்டனர். அதற்கான உத்தரவு கிடைக்காமல் இருந்தது. பின்னர் அழகர் கோயில் நிர்வாகம் சார்பில் வனத்துறையிடம் உணவு வழங்க அனுமதி பெற்று தந்தனர். இதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் நேற்று முன்தினம் முதல் அழகர் கோயில் மலையில் உள்ள குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவுப்பொருட்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

இதுகுறித்து ஊமச்சிகுளம் திருமால்புரத்தை சேர்ந்த சமூகஆர்வலர் சுதாகர் கூறும்போது, ‘அழகர்கோயில் மலையில் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தது. இதனால் கோயில் சார்பில் வனத்துறையில் அனுமதி பெற்று வாழைப்பழம், சுண்டல், கேரட் உள்ளிட்ட உணவு பொருட்கள் நாள்தோறும் தயார் செய்து, வேன் மூலம் கொண்டு சென்று விநியோகம் செய்து வருகிறோம். தடை காலம் முடிவும் வரை உணவு பொருட்கள் வழங்க அனுமதி வழங்கியுள்ளனர்’ என்றார். இதேபோல் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பசியால் தவித்த 100க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் மதனகலா மற்றும் போலீசார் உணவு, தண்ணீர் போன்றவற்றை வழங்கினர்.

Related Stories: