1000 வழங்குவதில் ஆளும்கட்சியினர் தலையீடு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொது மக்கள் முற்றுகை: ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு: கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் அ.தி.மு.க.வினர் தலையீடு இருப்பதாக கூறி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் அடுத்தடுத்து 2 இடங்களில் முற்றுகையிட்டனர். தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரண நிதியாக தலா ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாநகர பகுதியில் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணப் பொருட்களை அ.தி.மு.க.வினர் ஒட்டு மொத்தமாக வாங்கி தங்களுக்கு வேண்டியவர்ளுக்கு முன்னுரிமை கொடுத்து விநியோகித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.ஈரோடு பெரியார் நகர், பி.பெ. அக்ரஹாரம், கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், பொதுமக்கள் தங்களை நேரில் வந்து சந்தித்து வாங்கி செல்ல வேண்டும் என்றும் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், பி.பெ.அக்ரஹாரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை நேற்று பார்வையிட சென்ற, ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தென்னரசை அப்பகுதி மக்கள்  முற்றுகையிட்டு நிவாரண நிதி என்ற பெயரில் அ.தி.மு.க.வினர் தங்களை அடிமைபோல நடத்துவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பொதுமக்களுக்கு வீட்டிற்கே வந்து பணம் மற்றும் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து மக்கள் விடுவித்தனர். இதையடுத்து, கருங்கல்பாளையம், கமலா நகரில் உள்ள தனது வீட்டுக்கு  எம்.எல்.ஏ. தென்னரசு சென்றார். அப்போதும் அங்கிருந்த மக்கள் நிவாரண நிதியில் அ.தி.மு.க.வினர் தலையிடுவதாக கூறி முற்றுகையிட்டனர். அவர்களையும் அவர் சமாதானப்படுத்தினார்.

Related Stories: