பேரிடர் மேலாண்மைக்கான நிதியிலிருந்து தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்திற்கு ரூ.1.88 கோடி நிதி: துணை முதல்வர் ஓபிஎஸ்

சென்னை: 5 ஜெட்ராடிங் இயந்திரங்களை கொண்டு கிருமிநாசினி திரவம் திட்டப்பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் பொது இடங்களிலும் தெளிக்கப்படுகிறது என துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 571 பேருக்கு தொற்று பாதிப்புடன் இந்தியளவில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். 44 பேர் குணமடைந்துள்ளனர்.  இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; சுகாதார பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும், அங்காடிகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காகவும் கூடுதல் பணியாளர்களை அமர்த்துமாறு ஒப்பந்தக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தினமும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மொத்தம் 91 கருவிகள் மூலமும், தெளிப்பான்கள் மூலமும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள படிக்கட்டுகள், தாழ்வாரப்பகுதி, 10 அடி உயரத்திற்கு வெளிப்புற பகுதிகள் மற்றும் இதர பொது பகுதிகளில் 21.03.2020 அன்று முதல் தெளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னை மற்றும் இதர நகரங்களிலுள்ள அதிக மக்கள் வசிக்கின்ற 305 திட்டப்பகுதிகளில் பராமரிக்கப்படும் 1.49 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் ரூ.1.90 கோடி மதிப்பில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கிருமிநாசினி கலந்த நீர் தெளிக்கப்படுகிறது. அரசாணை எண் 179, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை நாள் 04.04.2020 -ன் படி பேரிடர் மேலாண்மைக்கான நிதியிலிருந்து தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்திற்கு ரூ.1.88 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மொத்த வணிக வளாக அங்காடியில் பொதுமக்கள் வரத்து கொண்ட 10 நுழைவாயில்கள் கண்டறியப்பட்டு பொதுத்துறை நிறுவனங்கள் உதவியுடன் சுமார் ரூ.17 லட்சத்தில் சுரங்கப்பாதை தெளிப்பான்கள் அமைக்கும் பணிகளை ஓரிரு நாட்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: