குடிநீர் வாரிய பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு கவசம் கட்டாயம்: விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவு

பெரம்பூர்: சென்னையில் குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு கொரோனா  தடுப்பு கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் கொரோனா  வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் அதிக அளவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்ட வருவது மாநகராட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும்  ஊழியர்கள்,  மருத்துவர்கள், மாநகராட்சி ஊழியர்கள், குடிநீர் வாரிய ஊழியர்கள், காய்கறி வியாபாரிகள், கடைக்காரர்கள் என பலருக்கும் தினசரி அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் லாரி டிரைவர்கள், கிளீனர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் பணிபுரியும் நீரேற்று நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவச உடை மற்றும் முகக்கவசம் கையுறை, சானிடைசர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு, கட்டாயம் இவற்றை பயன்படுத்த வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.  

குடிநீர் வாரியம் 6வது பகுதிக்குட்பட்ட  வியாசர்பாடி மற்ம் கொளத்தூர் நீரேற்று நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலும் பகுதி-6 பொறியாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் துணை பகுதி பொறியாளர் புவியரசன் ஆகியோர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு  ஊழியர்களுக்கு கொரோனா  தடுப்பு உடை, முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்களை நேற்று வழங்கினர். மேலும் பொதுமக்களுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினர்.

தொடர்ந்து, லாரி டிரைவர்கள், கிளீனர்கள்,  சூபபர்வைசர்கள் என அனைவருக்கும் கபசுரநீர் வழங்கப்பட்டது.  முன்னதாக ஊழியர்கள் வேலைக்கு வரும்போது அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என தர்மல் மீட்டர் மூலம் கண்காணித்து  அவ்வாறு காய்ச்சல் இருப்பின் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும், எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: