மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பற்றாக்குறை 200 பேருக்கு 98 பேர் மட்டுமே பணிபுரியும் அவலம்: கொரோனா தடுப்பு பணிகள் தொய்வு

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறை காரணமாக கொரோனா தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியில் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. இதில், வார்டுக்கு ஒருவர் வீதம் 200 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 98 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மற்ற இடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஒரு சுகாதார ஆய்வாளர் 2 முதல் 3 வார்டுகளை சேர்த்து கவனிக்கும் நிலை உள்ளது.

தற்போது குறைந்த அளவில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் வழக்கமான பணிகளுடன் அம்மா உணவகம் உள்ளிட்ட மேலும் சில பணிகளை சேர்த்து கவனிக்க வேண்டியுள்ளதால் கடும் பணிச்சுமையில் தவித்து வருகின்றனர்.

தற்போது, கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுவதால் சுகாதார ஆய்வாளர்களுக்கு வேலைப்பளு மேலும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் காலியிடங்களை நிரப்ப முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  ஆனால், சுகாதார ஆய்வாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப மட்டும் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் வீடு வீடாக நேரில் சென்று கொரோனா அறிகுறி குறித்து கணக்கெடுப்பது, வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை கண்காணிப்பது, சுகாதார பணிகளை மேற்கொள்வது, கிருமி நாசினி தெளிப்பது என பல்வேறு நடவடிக்கையில் சுகாதார ஆய்வாளர் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், ஒரு சுகாதார ஆய்வாளர் 2 அல்லது 3 வார்டுகளை கவனிப்பதால், கொரோனா தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் கணக்கெடுப்பதற்கு காலை 6 மணிக்கே மாநகராட்சி அலுவலகத்துக்கு சுகாதார ஆய்வாளர்கள்  வர வேண்டும். பின்பு மதியம்  அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு மறுபடியும் பணியை  தொடர வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 இந்த பணி மற்றும் இதர பணிகளை முடித்துவிட்டு அவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு இரவு 9 மணி ஆகிறது.  அப்போதுகூட தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. நள்ளிரவு 1.30 மணி அளவில் தான் கூட்டம் முடிந்து வீட்டுக்கு அனுப்புவதாக கூறப்படுகிறது. இதனால், சுகாதார ஆய்வாளர்கள் தூக்கமின்றியும், சாப்பிட கூட நேரமின்றியும் பணியாற்றுவதால் மன உளைச்சலில் உள்ளனர்.  எனவே, சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில் விரைந்து ஆட்களை நியமனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: