தடையின்றி உணவுப் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஊரடங்கால் வீணாகும் விவசாய விளைபொருட்கள்: நடவடிக்கை எடுக்குமா அரசு

இருபத்தியோரு நாட்கள் ஊரடங்கு ஒட்டுமொத்தமாக மக்களின் இயல்பு வாழ்க்கையை குலைத்துப்போட்டுள்ளது. திட்டமிடாமல், முன்னேற்பாடுகள் செய்யாமல் திடீரென மூன்று வார கால ஊரடங்கை அமல்படுத்தியதால் சமூகத்தின் பல தரப்பு மக்களும் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அமைப்புசாரா தொழிலாளிகள் சாரைசாரையாக நடந்தே ஊர் செல்லும் பரிதாபம், போகும் வழியில் உயிர் துறக்கும் அவலம். இவையெல்லாம் தினசரி காட்சிகளாக மாறிவிட்டன. மற்றொருபுறம் விவசாயிகள் நிலை மிகப்பரிதாபகரமாக உள்ளது. விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டுசெல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அடிப்படை தேவைகளின் முதல் ஆதாரமாக விளங்குவது உணவுதான். ஆனால், ஊரடங்கால் விவசாயப் பொருட்களை கொண்டுசெல்ல முடியாத நிலை இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகமானால் ஊரடங்கு நீடிக்கப்படும் அபாயமும் உள்ளது. இதனால் மக்கள் பசி, பட்டினியில் வாடும் நிலை ஏற்படும். இதன் தொடர்ச்சியாக வன்முறைகள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உண்டு. விவசாயப் பொருட்களை விற்பதற்கான தடைகள் நீங்கினால் இதை சரிசெய்ய முடியும். தற்போது கமிஷன் மண்டிகள், உழவர் சந்தைகள் எல்லாம் மூடப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்தும் இல்லை. இதனால் தக்காளி, காய்கறிகள், வாழைத்தார்களை எல்லாம் விற்க முடியாமல் விளைநிலங்களிலேயே அழுக விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு தடையில்லை என அரசு அறிவித்திருந்தாலும் நடைமுறையில் அதை விற்பனை செய்ய விவசாயிகள் கடும் சிரமப்பட வேண்டியுள்ளது என்பதே உண்மை. இதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு உடனே செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: