துரைப்பாக்கம் பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பில் சுகாதாரகேடு: தொற்றுநோய் பரவும் அபாயம்

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 193வது வார்டுக்கு உட்பட்ட துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தில் தகர ஷீட்களால் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவன கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சரியான முறையில் அடிப்படை வசதிகள்  செய்து தராததால், இவர்கள் தங்கியுள்ள  இடத்தில் கழிவுநீர் குளம் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லை அதிகரித்து,  தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், இவர்கள் அனைவரும் சிறிய இடத்தில் கூட்டமாக வசித்து வருவது சுற்றுப் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள்  சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்யும்போது, அங்குள்ளவர்கள் அதிகாரிகளை சரிகட்டி  அனுப்பி விடுகின்றனர். இதனால் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் திரும்பி செல்கின்றனர். தற்போது, இங்கு தங்கியுள்ளவர்கள்  சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவையால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க முறையான  அனுமதி பெறாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவர்கள் தங்கியுள்ள  இடமே சுகாதாரமற்ற முறையில் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: