சமூக இடைவெளியை கடைப்பிடித்து ‘வீட்லயே இருந்தீங்கன்னா பிரிட்ஜ், பீரோ, குக்கர் ப்ரீ...’அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

திண்டுக்கல்: சமூக இடைவெளியை கடைப்பிடித்து வீட்டில் இருந்தால் குலுக்கல் முறையில் மக்களுக்கு பிரிட்ஜ், பீரோ, குக்கர் இலவசமாக வழங்கப்படுமென அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகத்தை நேற்று  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்  சிறப்பு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

திண்டுக்கல்லில் உள்ள 48 வார்டுகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு 2,500 மதிப்புள்ள 39 வகையான பலசரக்கு பொருட்கள் 2 ஆயிரத்திற்கு வழங்கப்பட உள்ளது. அதேபோல் 13 வகையான காய்கறிகள் 100க்கு வழங்கப்படும்.  இந்த பொருட்களை வீட்டிலிருந்தவாறே வாங்கிக் கொள்ளலாம். வீட்டில் இருந்துகொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்  பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் டோக்கன் வழங்கப்படும். பின்னர் குலுக்கல் முறையில்  தேர்வு செய்யப்படும் முதல் நபருக்கு பிரிட்ஜ் இலவசமாக வழங்கப்படும். அதேபோல் 2வது பரிசாக 2 பேருக்கு பீரோ வழங்கப்படும்.

மூன்றாவது பரிசாக 3 பேருக்கு குக்கர் வழங்கப்படும். கொரோனா ஒரு தொற்றுநோய். இந்த நோய் யாருக்கும் வரக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். கொரோனா பாதிப்பு என்றால் உயிர் போகாது. அரசு சொல்வதை கேட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: