தற்காலிக கொரோனா வார்டுகளாக தனியார் கல்லூரிகள், மாணவர் விடுதிகளை மாற்றுவது குறித்து பதிலளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்த மக்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, பல தனிமைப்படுத்தல் பிரிவுகளை அமைத்து வருகிறது. ரயில் பெட்டிகள் கொரோனா தனி வார்டுகளாக மாற்றப்படுகின்றன.  இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்காக மருத்துவமனைகளில் உள்ள இடங்கள் மட்டும் போதுமானதல்ல. தமிழகத்தில் பல தனியார் கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் உள்ளன. இவற்றை தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றுவதன் மூலம் 50 ஆயிரம் படுக்கைகளை ஏற்படுத்த முடியும்.  

தனியார் கல்லூரிகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களையும் அனுமதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.  இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று ஜூம் வீடியோ அப் மூலம் விசாரணைக்கு வந்தது.

 அப்போது நீதிபதிகள், தாங்களாகவே கல்வி நிறுவனங்கள் முன்வந்தால் பிரச்னையில்லை. கல்வி நிறுவனங்களை அரசு பயன்படுத்த எப்படி உத்தரவிட முடியும் என்று கேட்டனர். அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் எம்.எல்.ரவி, அரசுக்கு மிக முக்கிய தேவை வரும்போது தனியாரின் இடங்களை எடுக்க அரசியலமைப்பில் உரிமை தரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு அரசு 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: