பாதுகாப்பு உபகரணங்கள் தராமல் வீடுவீடாக கணக்கெடுக்க கட்டாயப்படுத்துவதா? சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு

சென்னை: பாதுகாப்பு உபகரணம் எதுவும் தராமல் வீடுவீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுவதாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க புதிதாக வெளிமாநில, வெளிநாடு வந்தவர்களை கணக்கெடுக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால், போதிய ஊழியர்கள் இல்லாததால் இந்த பணியை விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை இப்பணியில் ஈடுபடுத்த வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களும் தற்போது வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் தராத நிலையில் இப்பணியில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் வெளியிட்ட அறிக்கை: அங்கன்வாடி பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு மற்றும் ஊதியம்/ பாதுகாப்பு உடைகள் தரப்படாத நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அங்கன்வாடி பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அங்கன்வாடி பணியாளர்களை கணக்கெடுக்கும் பணியில் வீடு வீடாக செல்ல வாய்மொழி உத்தரவிடுவதை எங்களது கூட்டமைப்பு கவலையோடு பார்க்கிறது. இத்தருணத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்க எங்கள் கூட்டமைப்பு தயாராக உள்ளது.

அதே சமயம் எங்களது பணியாளர்களின் குடும்ப நலன் கருதி அரசு உத்தரவாதம் அளித்தால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தயாராக உள்ளோம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணை இல்லாமல் தமிழகத்தில் அலுவலர்கள் வாய்மொழியாக இப்பணியில் ஈடுபட கட்டாயப்படுத்துகின்றனர். அவ்வாறு கட்டாயப்படுத்தினால் 72000 42718 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: