நம் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள்: ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்

சென்னை: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தகவல்: எந்த சுயநலமும் இல்லாமல் மருத்துவமனைகளில் தைரியமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி. இந்த  மோசமான தொற்று பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்கள் இதை கையாள எவ்வளவு  தயாராக இருக்கிறார்கள் என்று பார்க்கும்போது மனசு நிறைந்துவிட்டது. நம்  உயிரை காப்பாற்ற அவர்கள் உயிரை பணயம் வைக்கின்றனர்.

உலகையே  தலைகீழாக மாற்றியுள்ள இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக, நாம் அனைவரும் நமது  வித்தியாசங்களை மறந்து ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. மனிதம், ஆன்மீகம் ஆகியவற்றின்  அழகை செயலில் கொண்டு வரும் நேரம் இது. நமது பக்கத்து வீட்டில்  இருப்பவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும், வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கும்,  புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கும் உதவி செய்வோம். கடவுள்  உங்கள் மனதில் இருக்கிறார். அதுதான் மிகப் பரிசுத்தமான கோயில். மத  வழிபாட்டு இடங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த இது நேரம் அல்ல. அரசாங்கத்தின்  அறிவுரையை கேளுங்கள்.

தனிமைப்படுத்திக் கொண்டு சில வாரங்கள் இருந்தால், பல  வருடங்கள் ஆயுள் கிடைக்கும். இந்த தொற்றைப் பரப்பி சக மனிதருக்கு தீங்கு  ஏற்படுத்தாதீர்கள். இந்த கிருமி உங்களிடம் இருக்கிறது என்பதைக்கூட  உங்களுக்கு எச்சரிக்காது. எனவே, உங்களுக்கு தொற்று இல்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது புரளிகளை பரப்பி இன்னும் பதற்றத்தை அதிகரிக்கும் நேரம் அல்ல. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: