தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரேஷன் கடைகளில் நாளை முதல் 1000 விநியோகம்: கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடு

சென்னை: தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் நாளை முதல் 1000 மற்றும் ஒரு மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி மாலை 6 மணியில் இருந்து வருகிற 15ம் தேதி காலை 6 மணி வரை 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை சமாளிக்க, அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும்  தலா 1,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கடந்த 24ம் தேதி அறிவித்தார்.

முதல்வர் அறிவித்தபடி, பொதுமக்களுக்கு தலா 1000 மற்றும் ரேஷன் பொருட்கள் இலவசமாக கொடுக்கும் பணிகள் நாளை (2ம் தேதி) முதல் வருகிற 15ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க, ஒதுக்கப்பட்ட நாளிலும், நேரத்திலும் விநியோகிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். ரேஷன் கடைகளில் தலா 1000 எப்படி வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் அனைத்து மண்டல கூட்டுறவு இணை பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை நேற்று அனுப்பி உள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது:கொரோனா நிவாரண தொகையாக 1000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணத்தை பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நடைமுறையிலேயே வழங்கப்பட வேண்டும். நாளை (2ம் தேதி) முதல் நிவாரண உதவித்தொகை வழங்கும் பணியை தொடங்க வேண்டும். தலா இரண்டு 500 நோட்டாக மட்டுமே வழங்க வேண்டும்.இதற்காக 1,882 கோடியே 90 லட்சத்து 73 ஆயிரத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா நிவாரண உதவித்தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் தலா 1000 வழங்கப்படும்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.  

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 100 பேருக்கு மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு தெருவாக நாளை முதல் 15ம் தேதி வரை நிவாரண உதவி வழங்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரேஷன் ஊழியர்களுக்கு 2,500 ஊக்கத்தொகை

கொரோனா நிவாரண தொகையை பொதுமக்களுக்கு வழங்க ரேஷன் கடை ஊழியர்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் அதிகம் கூடினால், கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து இருப்பதாக கூறினர். இதையடுத்து, இந்த பணியில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அதன்படி விற்பனையாளர்களுக்கு தலா 5 ஆயிரமும், விற்பனை உதவியாளர்களுக்கு தலா 4 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் கோவிந்தராஜ் அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தார்.

அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட அரசு 21,517 விற்பனையாளர்களுக்கு 2,500ம், 3,777 விற்பனை உதவியாளர்களுக்கு (எடையாளர்) 2,000ம் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளார். இதற்காக 6 கோடியே 13 லட்சத்து 46 ஆயிரத்து 500 ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: