கொரோனா தொற்று பரவுவது குறையும் வரை ரூ.1000, இலவச திட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்: ரேஷன் கடை ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை

சென்னை: ரேஷன் கடை விற்பனையாளர்கள் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ₹1000 நிவாரணத்தொகை மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று அறிவித்தது. இது ரேஷன் கடை பணியாளர்களின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் 2ம் தேதி முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் ரேஷன் கடையை நோக்கி படையெடுப்பார்கள். இலவசத்துக்காக ஒட்டு மொத்த மக்களும் ரேஷன் கடையை முற்றுகையிடுவார்கள். ரேஷன் கடைக்கு வரும் மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் கட்டம் கட்டி நிற்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதற்கு முன்னதாக டோக்கன் முறையை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை எவ்வாறு அமல்படுத்துவது? டோக்கனை வீடு வீடாக கொண்டு தர நாங்கள் தயார், மக்கள் வாங்க தயாரா இருப்பார்களா? அடுத்து, மக்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்கனவே ரேஷன் கடைகளில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள 4 இன்ச் பைப் குழாய்களில் விற்பனையாளர் பொருட்களை போடவேண்டும். 10 கிலோ அரிசியை தூக்கி அந்த குழாயில் கொட்டுவது சிரமம். எனவே தமிழக அரசே இலவசங்களை அள்ளி தருவதற்கு இது ஏற்ற காலம் அல்ல. மேலும் நம்நாட்டில் நோயின் தாக்கம் குறைவாக உள்ள காரணத்தினால் மக்களிடையே அலட்சியம் அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவினால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படும் வரை அரசு இந்த இலவச திட்டங்களை மறுபரிசீலனை செய்து காலம் தாழ்த்தி செயல்படுத்த வேண்டும்.

Related Stories: