தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் விடுமுறை தர மறுத்து அதிகாரிகள் மிரட்டல்: சமையல்காரர்கள் குற்றச்சாட்டு

தாம்பரம்: கிழக்கு தாம்பரத்தில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் உள்ளது.  இதன் வளாகத்தில் ஏராளமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இங்கு வாட்ச்மேன், டிரைவர், சமையல்காரர்கள், கிரைவன்ஸ் மேன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 80க்கும் மேற்பட்டோர் நிரந்தர பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக இங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமையல்காரர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்காமல், விமானப்படை பயிற்சி மையத்திலேயே தங்கி, சமையம் செய்ய வேண்டும் என விமானப்படை பயிற்சி மைய அதிகாரிகள் சிலர் வற்புறுத்தி வருவதாகவும், மீறினால் சஸ்பெண்ட் செய்துவிடுவோம் என மிரட்டுவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சமையல்காரர்கள் கூறுகையில், ‘‘பணியாளர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து விமானப்படை மையத்திற்கு தினமும் வந்து செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமையல்காரர்களை மட்டும் அதிகாரிகள் பயிற்சி மையத்திலேயே தங்கி பணி செய்ய வேண்டுமென அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். மீறினால், சஸ்பெண்ட் செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர். நாங்கள் அங்கு தங்கி பணி செய்ய எந்த ஒரு உத்தரவும் இல்லை. அவர்கள் சொல்வதுபோல் அங்கு நாங்கள் தங்கி பணி செய்யும்போது எங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு.சில நாட்களுக்கு முன்பு பயிற்சி மையத்தில் உள்ள அதிகாரி ஒருவரின் வீட்டில் பணிபுரிந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு, அவர்கள் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. அப்படி இருக்க எங்களுக்கும் ஏதாவது பிரச்சினை என்றால் அதை அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள், என்பதற்காகவே அங்கு தங்கி பணிபுரிய நாங்கள் மறுக்கிறோம்,’’ என்றனர்.

Related Stories: