9 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினருடன் கொரோனா தடுப்பு பற்றி முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு பணி தொடர்பாக 9 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.  கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க தமிழகஅரசு தீவிர நடவடிக்கைகளை பல்வேறு துறைகள் மூலம் மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஊரடங்கு உத்தரவினால் பொது மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைக்கவும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை கொண்ட 9 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டார். இந்த குழுவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் ஒவ்வொரு குழுக்களிலும் 3 முதல் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்த குழு சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு பணி, அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த 9 குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். அப்போது கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்துபவர்களை கண்காணிப்பது மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி கேட்டறிகிறார்.

மேலும், தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த என்ன செய்யலாம் என்பது தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: