1000 வழங்கும் பணி தொடங்குவதால் ரேஷன் ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து: ஊரடங்கு இருப்பதால் பணிக்கு வர சங்கத்தினர் மறுப்பு

சென்னை:  தமிழக அரசு, கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த 24ம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை அரசு, தனியார் போக்குவரத்து மற்றும் அலுவலகங்கள் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையார் சஜ்ஜன்சிங் ரா சவான் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நேற்று அனுப்பியுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: கொரோனா நிவாரண உதவித்தொகை ₹1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக ரேஷன் கடைகளில் ஏப்ரல் 2ம் தேதி முதல் விநியோகிக்கப்பட வேண்டும்.

இதனால், அனைத்து நியாய விலை கடைகளுக்கான வாராந்திர விடுமுறை நாளான ஏப்ரல் 3ம் தேதி (வெள்ளி) அன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும். இதற்கான விடுப்பு பின்னர் அறிவிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் டோக்கன், சுழற்சி முறையில் தெரு வாரியான அட்டவணை அமைக்கப்பட வேண்டும். இதை மாவட்ட ஆட்சி தலைவர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் கூறுகையில், ‘அரசு வழங்கும் 1000 மற்றும் இலவச ரேஷன் பொருட்களை வாங்க அதிகளவில் மக்கள் கூடுவார்கள். அதனால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே 1000 ரொக்கப்பணத்தை வங்கிகள் மூலம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், சென்னை அருகே உள்ள பல்லாவரம் சரக பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர், கூட்டுறவு இணை பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், “தமிழக அரசு 144 தடை உத்தரவு அமல்படுத்தியதால் பொது போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.  தினமும் உணவின்றி, போக்குவரத்து வசதி இன்றி தவிக்கிறோம். எங்களது உயிர் பாதுகாப்பு செய்யப்படாத நிலையில், எங்களை நம்பிதான் எங்களது குடும்பம் உள்ளது. எனவே அரசு 144 தடை உத்தரவை திரும்ப பெறும்வரை, பணிக்கு வர முடியாத நிலையில் உள்ளோம். அதுவரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்து எங்கள் உயிரை காப்பாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

Related Stories: