நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெற 102ஐ தொடர்பு கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வீடுகளில் தவித்து வரும் கிட்னி சம்பந்தப்பட்ட நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெற 102ஐ தொடர்பு கொண்டு வாகன வசதியை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  கொரோனா வைரசின் தாக்கத்தால் நாடே முடங்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம்தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அவசிய தேவைக்காக வீட்டைவிட்டு வெளியே வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் ஏராளமான டாயாலிசிஸ் நோயாளிகள் உள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யக்கூடிய டயாலிசிஸ் சிகிச்சையை எடுத்தாக வேண்டும்.

 இல்லாவிட்டால் உடல் நிலை மோசமான சூழ்நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது. எனவே டயாலிசிஸ் நோயாளிகள் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் எப்படி வெளியில் செல்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். இதை அறிந்த தமிழக அரசு அவர்களுக்கு உதவும் வகையில் 102 என்ற எண்ணை அறிவித்துள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டால் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு வரும் வாகனங்கள் அவர்களை சம்பந்தப்பட்ட டயாலிசிஸ் மையங்களுக்கு அழைத்து சென்று சிகிச்சை முடித்து பின்னர் வீடுகளுக்கு கொண்டு வந்து விட்டு விடுவார்களாம். எனவே, இந்த வசதியை டயாலிசிஸ் நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories: