கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக சிறைகளில் இருந்து 2,642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுதலை: அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை: கொரோனா தொற்று சிறைகளில் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார். சீனாவில் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் இந்தியாவிலும் பரவத்தொடங்கியுள்ள இந்த வைரசால் 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 35 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைப்பதற்கான நடவடிக்கையை தமிழக சிறைத்துறை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் 2642 விசாரணை கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பரோலில் வெளியே சென்ற கைதிகளுக்கும் பரோல் நீட்டிப்பு செய்வது தொடர்பாகவும், தற்போது பரோல் கேட்கும் கைதிகளை அவர்களின் குற்ற தன்மையை ஆராய்ந்து பரோல் வழங்குவது குறித்தும்  அரசு பரிசீலனை செய்து வருகிறது.

வெளியில் இருந்து சிறைக்கு வரும் கைதிகள் உரிய மருத்துவ பரிசோதனையோடு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: