கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொலைப்பேசி மூலம் விசாரணை நடத்தி 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதி

சென்னை : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொலைப்பேசி மூலம் விசாரணை நடத்தி 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும்  ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சென்னை  உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இழுத்து மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜாமீன் கேட்டும், ஏற்கனவே பெற்ற ஜாமீனில் விதிக்கப்பட்ட நிபந்தனயை தளர்த்த கோரியும் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்குகள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது.

 உயர்நீதிமன்றம் இழுத்து மூடப்பட்டிருப்பதால், வழக்குகளை எல்லாம் நீதிபதி ஜெகதீஷ்சந்திரா வீட்டில் இருந்தபடியே விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் கருத்தை கேட்க வேண்டும். ஆனால், ஊரடங்கு உத்தரவின் காரணமாக அவர் தன் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.இதையடுத்து தொலைப்பேசியில், குற்றவியல் வக்கீலிடம் , நீதிபதி வழக்கு குறித்து கருத்து கேட்டார். அவர் தெரிவித்த பதிலின் அடிப்படையில்,58 வழக்குகளை விசாரித்தார். இதில், கொலை, கொலை முயற்சி, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவிட்டார்.

இவர்களுக்கு வருகிற ஏப்ரல் 27-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன்வழங்குவதாகவும், இதற்காக இடைக்கால ஜாமீன் பெற்ற 23 பேரும் தலா ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீன் வழங்கவேண்டும் என்று நீதிபதிஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவில் கூறியுள்ளார்.மேலும், ஏற்கனவே பெற்ற ஜாமீனில் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று வெவ்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை எல்லாம் விசாரித்த நீதிபதி, 3 பேரது ஜாமீன் நிபந்தனைகளையும் தளர்த்தி உத்தரவிட்டார்.

Related Stories: