புளியந்தோப்பு திருவேங்கட சாமி தெருவில் பராமரிப்பு இல்லாத காவலர் குடியிருப்பு: நோய் பரவும் அபாயம்

பெரம்பூர்: கொரோனா வைரஸ்  தாக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டி வருகின்றனர்.  வடசென்னை திருவிக நகர் 6வது மண்டலத்துக்குட்பட்ட 73வது வார்டு புளியந்தோப்பு திருவேங்கட சுவாமி தெரு பகுதியில் காவலர்களுக்கான குடியிருப்பு உள்ளது.  இங்கு  உதவி ஆய்வாளர்களுக்கான  வீடுகள் 16 வீடுகளும் போலீசாரின் வீடுகள் 80 வீடுகளும் என 96 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் நாள்தோறும் இந்த குடியிருப்பில் இருந்து வெளியே சென்று மீண்டும் உள்ளே வருகின்றனர். இந்த குடியிருப்பை சுற்றி குப்பைகளும், பாதாள சாக்கடை அடைப்பும் உள்ளன. மேலும் கழிவுநீர் தொட்டிகள் திறந்த நிலையிலேயே உள்ளன. இதனால் காவலர் குடும்பத்தினருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து காவலர் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘காவல் துறையினரின் குடியிருப்பு என்று தான் பெயர். ஆனால் இந்தப் பகுதியில் எப்போதும் குப்பைகளை சரிவர அள்ளுவதே இல்லை. எஸ்.ஐ குடும்பங்களுக்கு மாதம் 200 ரூபாயும் போலீஸ்காரர் குடும்பங்களுக்கு மாதம் 150 ரூபாய் பராமரிப்பு  செலவுக்காக வாங்குகின்றனர். ஆனால் முறையாக இந்த இடத்தை சுத்தம் செய்யாமல் குப்பை கூளங்களாக காட்சியளிக்கிறது. மேலும் கழிவுநீர் தொட்டிகள் திறந்து காணப்படுகின்றன. இதனால் சிறுவர்கள் வெளியே விளையாடுவதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் சில இடங்களில் கழிவுநீர் பைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறும் நிலை உள்ளது.

இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு காகம் விழுந்து இறந்தது. இதுநாள்வரை அதை சுத்தம் செய்யாமல் அதன் மீது ஒரு கல்லை வைத்து மூடி வைத்துள்ளனர்.  இவ்வாறு எங்கள் பகுதியில் அவல நிலை தொடர்ந்து வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்’’ என்றார்.

Related Stories: