பூந்தமல்லி கோரன்டைன் வார்டில் கண்காணிப்பில் இருந்தவருக்கு கொரோனா அறிகுறி?சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

பூந்தமல்லி: வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிந்து கண்காணிக்க பூந்தமல்லி அரசு பொது சுகாதார நிறுவனத்தில் தனியாக கோரன்டைன் வார்டு அமைக்கப்பட்டது. இங்கு பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள் 24 மணி நேரம் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, கொரோனா அறிகுறி இல்லை என்றால் வீட்டிற்கு அனுப்பப்பட்டு அங்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 92 பேர் தற்போது இங்கு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.  இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறியுடன் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருடன் சென்னை அரும்பாக்கத்தில் ஒரே அறையில் தங்கியிருந்த 7 பேர் பூந்தமல்லி கோரன்டைன் வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியானது.  இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று மாலை பூந்தமல்லி கோரன்டைன் வார்டில் ஆய்வு செய்தார். அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், பூந்தமல்லி அரசு பொதுசுகாதார நிறுவன துணை இயக்குநர் பிரபாகரன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து அங்கிருந்து அமைச்சர் புறப்பட்டுச்சென்றார். இங்கு அனுமதிக்கப்பட்டிருந்த அரும்பாக்கத்தை சேர்ந்த 7 பேரில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனையில் தெளிவான முடிவு கிடைக்காததால் சென்னை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்வதற்காக அந்த நபரை அழைத்துச்சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாகவே அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

Related Stories: