இசிஆர் பகுதி வீடுகளில் கைவரிசை தென்காசியில் பதுங்கியிருந்த 2 கொள்ளையர்கள் கைது: தங்க, வைர நகைகள், அமெரிக்க டாலர் பறிமுதல்

துரைப்பாக்கம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் கடந்த மாதம் தனியார் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை, ₹5000, விலை உயர்ந்த கை கடிகாரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.புகாரின்படி, நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், அடுத்த 20 நாட்களில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் வசித்து வந்த சென்னை தரமணியில் உள்ள அமெரிக்கன் பள்ளி அலுவலரின் வீட்டை உடைத்து 4  செல்போன், வைர நகை, அமெரிக்கன் டாலர்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.இதுதொடர்பாக, கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சவாரிக்காக காத்திருந்த ஒரு ஆட்டோவில் சென்றது பதிவாகி இருந்தது. அந்த எண்ணை வைத்து ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்ததில், மர்மநபர்களை, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இறக்கிவிட்டதாக கூறியுள்ளார். அதன்படி போலீசார், அங்கு சென்று விசாரித்தபோது, அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

தொடர்ந்து போலீசாரின் விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்மநபர், தென்காசி மாவட்டத்தில் பதுங்கி இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், தென்காசிக்கு சென்று, அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆயக்குடியை சேர்ந்த  உலகநாதன் (19), அதே பகுதி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த  நல்லசிவம் (24) என தெரிந்தது. மேலும் விசாரணையில், பனையூர் அமெரிக்கன் பள்ளி அலுவலர் மற்றும்  நீலாங்கரை டாக்டர் ஆகியோரது வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள், வைர நகைகள், அமெரிக்கன் டாலர் மற்றும் விலை உயர்ந்த  செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.  பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: