பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய பார்த்தசாரதி கோயில் உதவி ஆணையர் சஸ்பெண்ட்: தமிழக அரசு உத்தரவு

சென்னை:திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உதவி ஆணையராக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிலட்சுமி நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவர் கடந்த ஜனவரி 14ம் தேதி ஈரோடு உதவி ஆணையராக பணி இடமாற்றம் செய்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டார். அவரை உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறி இருந்தார். ஆனால், 70 நாட்கள் ஆன நிலையில் தற்போது வரை ஜோதிலட்சுமி பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையே பார்த்தசாரதி கோயில் உதவி ஆணையராக ஜோதிலட்சுமி இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்திற்கு உரிய முறையில் வாடகை வசூலிப்பதில்லை என்றும், வீடுகள் கட்டி வசித்து வருபவர்கள் பெரும்பாலும் உள்வாடகை தாரர்களாக இருப்பதாகவும், சிலர் விதியை மீறி வணிக வளாகங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாகவும், அவர்களை மிரட்டி ஜோதிலட்சுமி பணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், பெருமாள் மற்றும் அம்பாளுக்கு காணிக்கையாக சாத்தப்படும் தங்க, வெள்ளி ஜரிகைகள் கொண்ட அங்கவஸ்திரம் மற்றும் பட்டுச் சேலைகளை குறைந்த விலைக்கு விதியைமீறி விற்று வருவதாகவும் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி மீது புகார் கூறப்பட்டது.  அதேபோல பார்த்தசாரதி சுவாமி தெருவில் விதியை மீறி அடுக்குமாடி கட்டிடமாக கட்டி, மாதம் 60 ஆயிரம் வரை வாடகை வசூலித்து வரும் நபரிடம், குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு அந்த வீட்டின் மேல்தளத்தை இடித்து விட்டதாக உதவி ஆணையர் ஜோதிலட்சுமி பொய்யான அறிக்கையை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியதாக அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு  முன்வைக்கப்பட்டது. சமீபத்தில் பார்த்தசாரதி கோயில் சொர்க்கவாசல் திறப்பின் போது சிறப்பு தரிசனம் டிக்கெட் விற்பனை செய்ததில் 1.50 லட்சம் கோயிலின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. அதேபோன்று கோயிலில் 9 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதிலும் குளறுபடி நடந்திருப்பதாக  அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.  

இந்தநிலையில், உதவி ஆணையர் ஜோதி லட்சுமியை சஸ்பெண்ட் செய்து அறநிலையத் துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், ‘ஈரோடு உதவி ஆணையர் ஜோதிலட்சுமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால் 17 பிரிவின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ஈரோடு உதவி ஆணையராக பணி அமர்த்தப்பட்டு உள்ளதால் அவர் துறையின் அனுமதி இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது’ என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: