ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் 3வது நாளாக தடுத்து நிறுத்தம்

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகள் 31ம் தேதி வரை  மூடப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதையொட்டி கடந்த 21ம் தேதி காலை  6 மணி முதல் ஆந்திர மாநிலமான திருப்பதி, சித்தூர், கர்னூல்,  கடப்பா, பெங்களூரு,  ரேணிகுண்டா, புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வழியாக சென்னைக்கு செல்லும் வாகனங்களை ஊத்துக்கோட்டை போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள்  ரமேஷ், தினேஷ் குமார் மற்றும் போலீசார் 3வது நாளாக நேற்று   பால், காய்கறி வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை  தடுத்து நிறுத்தி திருப்பி விட்டனர்.

மேலும், ஆந்திராவில் உள்ள தும்பூர் கோனை நீர்வீழ்ச்சி, வரதயபாளையம் நீர்வீழ்ச்சி   மற்றும் திருப்பதி  ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய வாகனங்களான கார், பைக், சுற்றுலா பஸ், வேன் போன்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி மீண்டும் திருப்பிவிட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் ஊரடங்கு பிறப்பித்ததால் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செல்லும் சரக்கு வாகனங்களை தவிர மற்ற  கனரக வாகனங்களையும், சுற்றுலா வாகனங்களையும்  ஊத்துக்கோட்டை தமிழக-ஆந்திர எல்லையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். தமிழக எல்லையில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களுக்கு மருத்துவ துறையினர் கிருமி நாசினி தெளித்தும், அவர்களுக்கு காய்ச்சல், இருமல்  உளதா? என்பதை பரிசோதித்தும் அனுப்புகிறார்கள்.மேலும் ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து  37 பஸ்களில்  15 பஸ்கள் மட்டுமே  சென்னை, திருவள்ளூர்  ஆகிய பகுதிகளுக்கு  இயக்கப்பட்டது. ஆந்திரா பகுதிகளுக்கு தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது.நேற்று காலை 6 மணி முதல் ஆந்திராவில் இருந்து வந்த  99 கனரக வாகனங்கள் தமிழகத்திற்கு வந்தது. அதில், 20 வாகனங்கள் தமிழகத்தில் நுழைய விடாமல் திருப்பி அனுப்பினர். ஆந்திர மாநில அரசு பேருந்துகள் தமிழகத்துக்கு வருவது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: