தடையை மீறி வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்/ வெளிநாட்டவர்கள் பொதுவெளியில் நடமாடினால் பாஸ்போர்ட், விசா முடக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

சென்னை : தடையை மீறி வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்/ வெளிநாட்டவர்கள் பொதுவெளியில் நடமாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்/ வெளிநாட்டவர்கள் பொதுவெளியில் நடமாடினால் அவர்களின் பாஸ்போட்டை முடக்கி, விசாவை ரத்து செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அமைச்சர் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனிடையே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்/ வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.

415 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைய நிலையில் 186 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 415 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தொற்றால் 7 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000த்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.தொடர்ச்சியாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் வெளியே சுற்றி வருவதாக தகவல்கள் வெளிவந்ததையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில்,சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனத் தெரிவித்து இருந்தார்.

அதன் ஒரு பகுதியாக அதீத நடவடிக்கையாக அவர்களின் பாஸ்போர்ட் முடக்குவதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்யும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டவர்கள் பொதுவெளியில் நடமாடினால் அவர்களின் விசாவை ரத்து செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக தமிழக முதல்வர் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதலவர், கொரோனா அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது இப்படியான ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: