மக்கள் ஊரடங்கு காரணமாக ரூ. 220 கோடிக்கு மது விற்பனை: முன்கூட்டியே வாங்கி குவித்த குடிமகன்கள்

சென்னை:  கொரோனாவை தடுக்க இந்தியா முழுவதும் நேற்று சுயஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் சுயஊரடங்கு இன்று அதிகாலை 5 மணி வரை  நீட்டிக்கப்பட்டது.  இந்தநிலையில், சுயஊரடங்கை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று வணிக வளாகங்கள், பேருந்துகள், ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள் உள்ளிட்ட எதுவும் இயங்கவில்லை. இதேபோல், டாஸ்மாக் கடைகளும், பார்களும் முழுமையாக மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதை முன்னதாக அறிந்த குடிமகன்கள் நேற்று முன்தினம் கடைகளின் முன்பு குவிந்தனர். கொரோனாவை தடுக்க கட்டம் கட்டியும், வரிசையாக கோடு போட்டும் அதில் நிற்க வைத்து மதுவாங்க வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் இந்த உத்தரவை பல இடங்களில் வாடிக்கையாளர்கள் பின்பற்றவில்லை. கூட்டம் கூட்டமாகவே முண்டியடித்துக்கொண்டு மதுவகைகளை வாங்கிச்சென்றனர். அந்தவகையில், நேற்று முன்தினம் 21ம் தேதி தமிழகத்தில் மதுவிற்பனை அதிகரித்து காணப்பட்டது. அன்று மட்டும் (சனிக்கிழமை) சென்னை மண்டலத்தில் ₹48.61 கோடியும், மதுரை மண்டலத்தில் ₹41.54 கோடியும், சேலம் மண்டலத்தில் ₹41.22 கோடியும், கோவை மண்டலத்தில் ₹43.52 கோடியும், திருச்சி மண்டலத்தில் ₹45.60 கோடியும் மதுவிற்பனை நடந்துள்ளது. மொத்தமாக ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ₹220.49 கோடிக்கு மதுவிற்பனையானது. வழக்கமாக, சாதாரண நாட்களில் ₹70 முதல் ₹100 கோடி வரையிலும், சனி, ஞாயிறு போன்ற வாரவிடுமுறை நாட்களில் ₹120 முதல் ₹135 கோடி வரையிலும் மதுவிற்பனை நடைபெறும். ஆனால், சுய ஊரடங்கை முன்னிட்டு சனிக்கிழமை அன்று முன்கூட்டியே மதுவகைகளை மதுப்பிரியர்கள் வாங்கிக் குவித்ததால் மதுவிற்பனை அதிகரித்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: