அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் சிடிஎச் சாலையில் மணல் குவியல்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஆவடி: அம்பத்தூர், ஆவடி பகுதியில் உள்ள சிடிஎச் சாலையில் மைய தடுப்பு ஓரங்களில் மணல் குவிந்து கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக சிடிஎச் சாலை செல்கிறது. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

குறிப்பாக இச்சாலை வழியாக ஆவடி பகுதியில் உள்ள பாதுகாப்புத்துறை நிறுவனங்களுக்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர் பகுதிகளில் சுற்றியுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேருந்துகளில் சென்று வருகின்றனர். மேலும், வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கும் சி.டி.எச் சாலையை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையை நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக பராமரிப்பது இல்லை. குறிப்பாக, இச்சாலையின் மையப்பகுதி, ஓரங்களில் மணல் குவிந்து கிடக்கின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,‘‘ஆவடி, திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மையப்பகுதி, ஓரங்களில் மணல் குவிந்துள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது மணல் குவியலில் சிக்கி கீழே விழுகின்றனர்.

அப்போது, பின்னால் வரும் லாரி உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் அவர்கள் மீது மோதி உயிரிழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. இதோடு மட்டுமல்லாமல், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வேகமாக செல்லும்போது மண் காற்றில் பறக்கின்றன. அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கண்களில் மண் துகள்கள் விழுந்து அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களில் மணல் துகள்கள் விழும்போது அவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும், சாலை ஓரங்களில் சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளும் மணல் குவியலில் சிக்கி கீழே விடுகின்றனர். மேலும், சாலையின் மையத்தில் உள்ள தடுப்பு சுவரில் கருப்பு, வெள்ளை பெயின்ட் அடித்து பல மாதங்களாகிறது. இரவு நேரங்களில் தடுப்புச் சுவர் சரியாக தெரியாததால் வாகன ஓட்டிகள் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பியும் பலனில்லை. எனவே அம்பத்தூர், ஆவடி பகுதியில் உள்ள சிடிஎச் சாலையில் மையத்தடுப்பு ஓரங்களில் உள்ள மணல் குவியலை அப்புறப்படுத்தவும், மைய தடுப்பு மீது கருப்பு, வெள்ளை பெயின்ட் அடிக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Related Stories: