நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் உள்ஒதுக்கீடு

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு: நீட் தேர்வு அறிமுகப்படுத்திய பிறகு அத்தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்த நிலை வரும் ஆண்டுகளில் தொடரக்கூடாது என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. அதிமுக அரசு, இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றது. இது மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில், 1 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேகமாக ஒரு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம்  இயற்ற அதிமுக அரசு பரிசீலித்து வருகிறது.  

இச்சட்டத்தை இயற்றுவதற்கு வகை செய்ய ஏதுவாக தேவைப்படும் அனைத்து புள்ளி விவரங்களையும் தொகுத்து உரிய பரிந்துரையையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஒரு ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையத்தில், பள்ளிக் கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, சட்டம் ஆகிய துறைகளின் அரசுச் செயலாளர்களும், பள்ளிக் கல்வித் துறையினால் நியமிக்கப்படும் 2 கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.  மருத்துவக் கல்வி இயக்குநர் இவ்வாணையத்தின் உறுப்பினர்-செயலராக செயல்படுவார். மேற்கூறிய பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் குறைந்த அளவிலேயே சேர்வதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவர்களின் சமூக பொருளாதார நிலையினை மதிப்பீடு செய்து, இந்நிலையை சரி செய்ய, அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்த ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்யும். தனது பரிந்துரையை ஒரு மாத காலத்திற்குள் இவ்வாணையம் அரசுக்கு சமர்ப்பிக்கும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: