×

உலக காடுகள் தினம்: 'வாழ்க்கையை வளப்படுத்தும் வனங்கள்'!

இயற்கை அளித்த நமக்கு அளித்த மிகப்பெரும் கொடை காடுகள். அவைகள்தான், நமக்கான மழையை பொழிவிக்கும் அடர்ந்த மரங்களை  கொண்டுள்ளன. நீர்நிலைகளை பாதுகாக்கின்றன. அவற்றை பாதுகாக்க விலங்கினங்களையும் தன்னகத்தே வைத்துக்கொண்டு, மனிதனுக்கு உதவும்  உற்ற தோழனாகவும் வனப்பகுதிகள் விளங்குகின்றன. இவற்றை பாதுகாக்க கடந்த 2012, நவ.28ம் தேதியில் கூடிய ஐ.நா சபை, ஒவ்வொரு ஆண்டும்  மார்ச் 21ம் தேதியை உலக காடுகள் தினமாக அறிவித்துள்ளது. பரந்து விரிந்த இந்த உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகளே உள்ளன. வெறும் மரங்கள் அடர்ந்த பகுதியே காடுகள் எனக்கூறி விட முடியாது. மனித வாழ்க்கையில் இவை முக்கிய பங்குகள் வகிக்கின்றன. காடுகளின் உதவியால்தான் நாம் ஆக்ஸிஜனை சுவாசிக்க முடிகிறது. நிழல் தருகிறது.  பெரும் வெள்ளப்பெருக்கு, மண் அரிப்பை தடுக்கிறது. ஆனால், காட்டின் அவசியத்தை புரியாமல் நாம் வாழ்வதுதான் மோசமான ஒன்றாகும்.

சாலை, நகர் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. சில சமூக விரோதிகள் விலங்குகளை வேட்டையாட,  வனப்பகுதிகளில் காட்டுத்தீயை ஏற்படுத்துகின்றனர். மேலும், அரிய வகை மரங்களை வெட்டி கடத்துகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில்,  மழையளவு குறைந்ததற்கு மரக்கடத்தலே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கொஞ்சம், கொஞ்சமாக காடுகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி விடுகிறோம். இதனால்தான், இப்போதெல்லாம் வனவிலங்குகள் குடியிருப்புக்குள்  நுழைந்து விடுகின்றன. நீதிமன்ற அறிவுரை மற்றும் வனத்துறையின் சட்டப்படி, ஒரு மரத்தை வெட்டும் போது, அதற்கு பதிலாக 10 மரங்கள் நடப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் அது கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதனால் காடுகளின் பரப்பளவு சுருங்கி வருகிறது.

மரங்களை பராமரித்தால் மட்டுமே வனங்களை பாதுகாக்கலாம். உலக அளவில் 160 கோடி பேர், அன்றாட வாழ்வாதாரத்துக்கு காடுகளை நம்பியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் காடுகளின் பரப்பளவு 6.30 லட்சம் ச.கி.மீ. இந்தியாவில் ஆண்டுக்கு 0.6 சதவிகிதம் காடுகள் அழிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இன்றைய புவி வெப்பமயமாதல் அதிகரிப்புக்கு வனப்பகுதிகளில், மரங்கள் வெட்டப்படுவதும், காடுகளின் பரப்பளவு குறைவதுமே முக்கிய காரணமாகும். நான்குவழிச்சாலை உள்ளிட்ட விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக மரக்கன்றுகளை நாம் நடுவதில்லை. அதன்பலனைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இனி வரும் காலங்களில் மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும் ஆணிவேராக பயன்படும் காடுகளை அழிவின் பிடியில் இருந்து காப்பது நம் அனைவரின் கடமையாகும். ஆரோக்கியமான காற்று, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடுகளை நீக்குவதற்கு மரங்கள் மிக முக்கியம்.

விலைமதிக்க முடியாத காடுகள் அழிக்கப்பட்டால் விலங்கினம், பறவையினம் எனப் பல்லுயிர்த்தன்மை அழியும். பல்லுயிர்த்தன்மை அழிந்தால் மனித இனத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். இன்று கொரோனா உள்ளிட்ட கொடிய நோய்களின் பெருக்கத்திற்கு, பல்லுயிர் பெருக்கம் குறைந்ததும் ஒரு காரணமென கூறப்படுகிறது. எனவே, வனப்பகுதியை அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், கூடுமானவரை நம் வீட்டைச்சுற்றி சிறிய வகை மரங்களை நடலாம். அதன்மூலம் அந்த இடத்தில் நீரோட்டம் நிறைந்திருக்கும். இதனால் நம் சுற்றுப்புறம் குளிர்ச்சி அடையும். பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் வனப்பகுதிகள், நகர விரிவாக்கத்திற்காக மறைமுகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த நாட்டுக்கு மட்டுமல்ல... உலக நாடுகளுக்கும் பாதுகாப்புதான். பொதுவாக, வனப்பகுதிகளே நமது மழைத்தேவையை பெருமளவு பூர்த்தி செய்கின்றன. எனவே, வனப்பாதுகாப்பை வலியுறுத்துவோம். வனம் காப்போம்.. வான்மழை பெறுவோம்.

Tags : World Forest Day , Forest,Life,World
× RELATED திராவிட மாடல் அரசின் லேப்டாப் திட்டம்,...