ராமேஸ்வரத்தில் கொரோனா பீதியால் தரிசனத்துக்கு தடைவிதிப்பு: கோயிலுக்கு வந்த வெளிமாநில பக்தர்கள் ஏமாற்றம்!

ராமேஸ்வரம் :  கொரோனா பீதியால் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நேற்று வந்த  வெளிமாநில பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில்  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன், பழநி தண்டாயுதபாணி சுவாமி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி உள்ளிட்ட பெரிய  கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவாமி சன்னதிகளில் வழக்கமான  பூஜைகள் மட்டும் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து ஸ்படிகலிங்க பூஜை, தொடர்ந்து சுவாமி சன்னதியில் கால பூஜை  நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவில் ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த பக்தர்கள், நேற்று அதிகாலை தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்தனர். காலை  8 மணியுடன் தரிசனம் நிறுத்தப்பட்டது. 8 மணிக்கு மேல் கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தீர்த்தமாடவும்  அனுமதிக்கப்படவில்லை. மார்ச் 31ம் தேதி வரை இத்தடை நீடிக்கும் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் போர்டு எழுதி வைக்கப்பட்டு  பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. காலை 8 மணியுடன் பக்தர்கள் தரிசனம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், தகவல் தெரியாமல்  வெளிமாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஆயிரக்கணக்கில் செலவழித்து வந்து கடைசியில், தரிசனம் செய்யாமல் திரும்பிச்செல்வது வருத்தமளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர்  அக்னிதீர்த்த கடலில் தீர்த்தமாடிய விட்டு, ராமநாதசுவாமி கோயில் கோபுரத்தை வணங்கி விட்டு புறப்பட்டு சென்றனர். கொரோனா பீதியால்  ஏற்கனவே ராமேஸ்வரத்திற்கு சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் வருகையின்றி நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. நாளை ஊரடங்கு உத்தரவு  போடப்பட்டிருப்பதால், இன்று மீனவர்கள் கடலுக்கு செல்வதையும் தவிர்த்துள்ளனர். இதனால் படகுகள் அனைத்தும் கரை நிறுத்தப்பட்டுள்ளன. இன்று  மீன் பிடித்து திரும்பும் பாம்பன் மீனவர்களும் நாளை கடலுக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்த்துள்ளனர்.

Related Stories: