மணலி அம்பேத்கர் தெருவில் இடிந்து விழும் நிலையில் வாசகர்களை அச்சுறுத்தும் நூலகம்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 21வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் மாவட்ட கிளை நூலகம் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ், வார இதழ் மற்றும் பல்வேறு பொது அறிவு சம்பந்தமான நூல்களை படிப்பதற்காக இங்கு வந்து செல்கின்றனர்.  பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது பழுதடைந்துள்ளதால், மழை காலத்தில் சுவர் விரிசலில் மழைநீர் கசிகிறது. இதனால் அங்குள்ள நூல்கள் மற்றும் நாளிதழ்கள் சேதமடைவதோடு, வாசகர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முதல் மாடியில் நூலகம் இயங்குவதால் முதியவர்கள் பெண்கள் படிக்கட்டில் ஏறி செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

இந்த நூலகத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நூலகம் கட்ட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாநகராட்சிக்கும் வாசகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்த கட்டிடம் இடிந்துவிழும் சூழ்நிலையில் இருப்பதால் வாசகர்கள் பீதியுடன் வந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து, நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: