கொரோனா விழிப்புணர்வு பணிக்கு நர்சிங் மாணவர்களை பயன்படுத்த உத்தரவு

தேனி: தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நர்சிங் மாணவ, மாணவியர்களை பயன்படுத்திக் கொள்ள மாநில நர்சிங் கல்லூரி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு நர்சிங் கல்லூரிகளுக்கான பதிவாளர் ஆனிகிரேஸ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நர்சிங் கல்லூரி நிர்வாகத்தினருக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாவட்டந்தோறும் ஒரு நர்சிங் கல்லூரியை சேர்ந்தவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தோடு இணைந்து, கொரோனா வைரஸ் தடுப்புக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் தேனி என்.ஆர்.டி நர்சிங் கல்லூரி, கைலாசப்பட்டி திரவியம் நர்சிங் கல்லூரி, ராஜதானி அன்னைடோரா நர்சிங் கல்லூரி தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி நர்சிங் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவியர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்ற உத்தரவுகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் பிற மாவட்டங்களை சேர்ந்த சுகாதாரத் துறையினருடன் சேர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதேசமயம் கேரளாவின் அண்டைய மாவட்டமாக உள்ள தேனி மாவட்டத்தில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் விடுப்பில் சென்றுள்ளதால் கொரோனா பாதிப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நர்சிங் கல்லூரிகளுக்கு நர்சிங் பதிவாளரிடம் இருந்து வந்துள்ள கடிதம் சுகாதாரத்துறையினனக்கு வந்து சேரவில்லை எனக் காரணம் கூறி சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த போதிய ஒத்துழைப்பு கொடுக்காமல் விட்டுள்ளது நர்சிங் கல்லூரி மாணவியர்களிடத்தில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Related Stories: