கொரோனாவால் ஜவுளி வியாபாரம் ‘நஹி’ : சொந்த ஊருக்கு புறப்பட்ட வடமாநில வாலிபர்கள்

கம்பம்: கொரோனா அச்சத்தால், வியாபாரம் குறைந்ததால் இடுக்கி மாவட்டத்தில் வீடுதோறும் ஜவுளி விற்ற வடமாநில வாலிபர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். கொரோனாவால் தொழில்துறை, வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோழிப்பண்ணை தொழில், ஜவுளி உற்பத்தி தொழில், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், திரைப்படத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மார்கெட்டுகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டதால் கடும் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக எல்லையை ஒட்டிய கேரள இடுக்கி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களுக்கு அரசு தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் வீடுதோறும் சென்று ஜவுளி, பெட்ஷீட், விரிப்பு என விற்பனை செய்து வந்த வடமாநில வாலிபர்கள் வியாபாரம் குறைந்ததால் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். நேற்று 10க்கும் மேற்பட்ட வடமாநில வாலிபர்கள் கம்பம்மெட்டு பகுதியிலிருந்து கம்பம் வந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் தங்கி, வீடு வீடாகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தோம், கொரோனா அச்சத்தால் மக்கள் எங்களிடம் பேசவே அச்சப்படுகின்றனர். இரண்டு வாரமா வியாபாரம் இல்லை. இதனால், சொந்த ஊருக்கு புறப்படுகிறோம்’ என்றனர்.

Related Stories: