கொரோனா பரவாமல் தடுப்பு நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி திடீர் ஆய்வு

சென்னை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கீழமை நீதிமன்றங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா பரவுவதை தடுக்க சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையில் அரசு அதிகாரிகளுடன் கடந்த வாரம் கூட்டம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து நீதிமன்றம் தரப்பில் அறிவிப்பு வந்தது. அந்த அறிவிப்பில், ஐகோர்ட் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் தவிர்த்து வேறுயாரும் உள்ளே அனுமதிக்க கூடாது.

கேன்டீன்களை மூட வேண்டும். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றங்களில் சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனைதொடர்ந்து நேற்று காலை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றம் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கீழமை நீதிமன்ற நீதிபதிகளிடம் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தை சுகாதாரமாக வைத்துகொள்ளவும், அடிக்கடி கிருமிநாசினி தெளிக்கவும் அறிவுறுத்தினார். நேற்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. முக்கிய வழக்குகளுக்கான வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: