மண்டல, வாக்காளர் பதிவு அலுவலர்களை அணுகி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

சென்னை: வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர் வாக்காளர் பதிவு அலுவலர்களை அணுகியோ அல்லது இணையதள முகவரி, இலவச அழைப்பு எண் மூலமாகவோ சரிபார்க்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு சுருக்க திருத்தம் 2020ன்படி கடந்த பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  

இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர் திருத்த காலத்தில் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பணி நடந்து வருகிறது. எனவே, வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர் வாக்காளர் பதிவு அலுவலர்களை அணுகியோ அல்லது இணையதள முகவரி www.nvsp.in மூலமாகவோ அல்லது இலவச அழைப்பு எண் 1950 மூலமாகவோ சரிபார்க்கலாம்.  திருத்தங்கள் இருப்பின் கீழ்க்கண்ட படிவங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேற்படி விண்ணப்பிக்கப்பட்டு, பெறப்பட்ட படிவங்கள் களப்பணியாளர்களால் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும்.  மேலும், மேற்கூறிய திருத்தங்கள் யாவும் கணினியில் மேற்கொள்ளப்படுவதால், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு சுருக்க திருத்தத்தின்போது வெளியிடப்படும். மேலும், இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய புதிய உத்தரவின்படி ஏற்கனவே வழங்கப்பட்ட பழைய வாக்காளர் அடையாள அட்டையை மாற்றி புதிய அட்டை வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஏற்கனவே, புதிய முறையில் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது.

புதிய வாக்காளர் அடையாள அட்டை வரப்பெற்ற நபர்களுக்கு, கைப்பேசி எண் கொடுக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். வாக்காளர் அடையாள அட்டை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்  மூலமாக வழங்கப்பட்டு, அதற்காக ஒப்புதலும் சம்பந்தப்பட்ட வாக்காளர் குடும்ப உறுப்பினர்களிடம் பெறப்படும். எனவே, வாக்காளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: