திருப்பத்தூர் அருகே ஏரிக்கரையில் பிராய்லர் கோழிகளை விட்டுச்சென்ற மர்ம நபர்கள்: போட்டிபோட்டு பிடித்துச்சென்ற பொதுமக்கள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே அதிகாலையில் மர்ம நபர்கள் விட்டுச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராய்லர் கோழிகளை பொதுமக்கள் பிடித்துச் சென்றனர். கொரோனா வைரஸ், பறவைக்காய்ச்சல் பீதி காரணமாக பிராய்லர் கறிக்கோழி  விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. வதந்தி பரப்பியதால் ஞாயிறு விடுமுறை தினங்களிலும் கூட கோழி இறைச்சிக் கடைகள் வெறிச்சோடின. இதனால், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி  வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூரை சுற்றி உள்ள பல்வேறு இடங்களில் கோழிப்பண்ணைகள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை திருப்பத்தூர் அடுத்த கீழ்குப்பம் மற்றும் உடையாமுத்தூர் ஏரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிராய்லர் கோழிகள்  சுற்றித்திரிந்தன. மர்ம நபர்கள் வாகனத்தில் பிராய்லர் கோழிகளை ஏற்றி வந்து அங்கு விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதில் சில கோழிகள் ஏரி பகுதியில் மயங்கிய நிலையில் சுற்றித்திரிந்தது. காலையில் அவற்றை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான கோழிகளை பிடித்துச்சென்றனர். தகவலறிந்ததும் உடையாமுத்தூர், குரும்பர்தெரு, மாங்குப்பம், புரத்தார்வட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம்  கூட்டமாக வந்து கோழிகளை பிடித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: