தாம்பரம் பகுதியில் கொரோனா தடுப்பு : கிருமி நாசினி தெளிப்பு

பல்லாவரம்: தாம்பரம் பகுதியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த நோயின் பாதிப்பு இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இந்தியாவில் மட்டும் இந்த வைரஸ் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இருநூறுக்கும் மேற்பட்டோர், வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்குநாள் தீவிரமடையும் இந்த வைரஸ் தாக்குதலை சமாளிக்கும் வகையில், அரசும் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், எப்பொழுதும் மக்கள் நெரிசல் மிகுந்து காணப்படும் அண்ணா சாலை மற்றும் தியாகராய நகர் ஆகிய பகுதிகள் தற்போது மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில், தாம்பரம் நகராட்சி சார்பில் அரசுப் பேருந்து, ஏடிஎம், நடைமேடை ஆகிய பகுதிகளில் நோய் தடுப்பு மருந்துகள் அடிக்கப்பட்டன. இதன்மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொன்றுக்கு எளிதில் நோய்கள் பரவுவது தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: