கொரோனா பாதிப்பு தடுக்க விடுமுறைபள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை: பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை

சென்னை: கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள சூழ்நிலையில், சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிகள் முயற்சித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவித்து முதல்வர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை, கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவுகளின் பேரில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த சனிக்கிழமை முதல் இயங்கவில்லை. ஆனால், பொதுத் தேர்வு எழுதும் பள்ளிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேர்வுப் பணியில் உள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.

இதுதவிர, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா பீதியுடன் தேர்வு எழுதுவதற்கு வருகின்றனர். இதையடுத்து தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை நேற்று உத்தரவிட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தேர்வுப் பணிக்கு வரும் ஆசிரியர்களும் தங்கள் கைகளை உரிய கிருமி நாசினி, சோப்பு கொண்டு தூய்மைப்படுத்திக் கொள்ளவும் அதற்கு தேவையான சோப்பு மற்றும் கிருமி நாசினி பொருட்களை தனிக் கட்டண நிதி, பெற்றோர் ஆசிரியர் கழக நிதிமூலம் வாங்கிக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர, பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்கள் வரை நடக்கிறது. அதனால் பள்ளிகளில் தற்போது சிறப்பு வகுப்பு நடத்த வேண்டாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்புக்காக 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து விட்டதால் அந்த நாட்களில் சில பள்ளிகள் சிறப்பு வகுப்பு நடத்தப் போவதாக கூறி மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால், பள்ளிகளில் யாரும் சிறப்பு வகுப்பு நடத்தக் கூடாது என்றும், அப்படி மீறி நடத்தினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

Related Stories: