கொரோனா வைரஸ் எதிரொலி; தஞ்சை பெரியகோயில் மூடல்: கலெக்டர் அதிரடி உத்தரவு

* கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் மூடல்

தஞ்சை: கொரோனா வைரஸ் எதிரொலியால் தஞ்சை பெரியகோயிலை மூட மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டது. மனோரா, கல்லணை, தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம், மணிமண்டபம், தஞ்சை அரண்மனை, சரஸ்வதி மகால் நூலகம், தொல்லியல்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் மணிகோபுரம், மராட்டா தர்பார் ஹால் ஆகியவை மூடப்பட்டன. வரும் 31ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சை பெரியகோயிலில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்கள் சோதிக்கப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென, 24 மணி நேரமும் திறந்திருக்கும் பிரதான நுழைவுவாயிலான கேரளந்தகன் நுழைவு வாயில் கேட் மூடப்பட்டது. இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறை சார்பில் கொரோனா வைரசுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நினைவு சின்னம் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுகிறது என பேனர் கட்டப்பட்டிருந்தது. பெரியகோயில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12 மணி அளவில் நடை சாற்றப்படும். பின்னர் மாலை திறக்கப்பட்டு இரவு கோயில் நடை அடைக்கப்படும்.

இன்று காலை சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள், வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்தனர்.

முன்னறிவிப்பின்றி கோயில் மூடப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோயில் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தொல்லியல் துறையினர், இந்து சமய அறநிலையத்துறை கோயில் செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் 45 நிமிடம் தாமதமாக பிரதான நுழைவு வாயில் திறக்கப்பட்டது. ஆனால் பூஜைகள், அர்ச்சனைகள், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கவில்லை.

இதுகுறித்து செயல் அலுவலர் மாதவன் கூறுகையில், மத்திய அரசு நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி, இந்திய தொல்லியல் துறையினர் கோயிலை இன்று அடைத்தனர். ேகாயிலை தினமும் திறக்கவும், பூஜைகள் நடத்தவும் தொல்லியல் துறையிடம் பேசிவருகிறோம். அதுவரை கோயில் திறக்கப்படும். ஆனால் அர்ச்சனை, ஆராதனைகள் நடக்காது. மறு உத்தரவு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும் என்றார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில், புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு தினமும் வெளிநாட்டினர், சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூடிய கோயிலாகும். ஆனால் தற்போது கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸ் பீதியால் இக்கோயிலுக்கு வெளிநாட்டினர் வருகை குறைந்துள்ளது. இதனையடுத்து, நேற்று இரவு முதல் வரும் 31ம் தேதி வரை இக்கோயில் மூடப்படுவதாக இந்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பும் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: