வாக்குமூல கடிதத்தை ஆய்வு செய்யாத போலீசார் மனைவி, குழந்தை தற்கொலை வழக்கில் கணவன் விடுதலை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் தற்கொலை செய்தவர் எழுதி வைத்த வாக்குமூல கடிதத்தை போலீசார் ஆய்வு செய்யாததால் கணவனை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பாலகுமார். இவருக்கும் பச்சையப்பன் என்பவரின் மகள் காஞ்சனாவுக்கும் கடந்த 2005ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நந்திதா என்ற குழந்தை பிறந்தது. பாலகுமார் தான் வசிக்கும் பகுதியில் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் அந்த கடை நஷ்டத்தில் இயங்கவே கடையை அவர் மூடிவிட்டார். இதனால், மது பழக்கத்துக்கு அடிமையானார். தினமும் மது குடித்துவிட்டு மனைவியை கொடுமைப் படுத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2008 அக்டோபர் 6ம் தேதி காஞ்சனா தற்கொலை வாக்குமூலமாக ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தனது குழந்தையை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, காஞ்சனாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலகுமார் மீது விஷ்ணு காஞ்சிபுரம் போலீசார் கொலைக்கு காரணமாக இருத்தல் போன்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் பாலகுமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து 2013ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாலகுமார் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.அன்பழகன் ஆஜராகி, தற்கொலை செய்த காஞ்சனாவின் வாக்குமூலத்தை போலீசார் ஆய்வு செய்யவில்லை என்று வாதிட்டார்.

* வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:

இறந்த காஞ்சானா எழுதிவைத்த தற்கொலை வாக்குமூல கடிதத்தில், தனக்கு கடுமையான கால்வலி மற்றும் வயிற்றுவலி இருப்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன். தனது சாவுக்கு தான் மட்டுமே காரணம் என்று தெரிவித்துள்ளார். இந்த கடிதம் அவர் எழுதியதுதானா? என்பது குறித்து விசாரணை அதிகாரி ஆய்வு செய்யவில்லை. காஞ்சனாவின் கையெழுத்துதானா? என்று கையெழுத்து நிபுணரின் அறிக்கையை பெறவில்லை. கையெழுத்து ஆய்வு கிரிமினல் வழக்குகளில் மிக இன்றியமையாதது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்துள்ளது.

இதை விசாரணை நீதிமன்றமும் கவனிக்க தவறிவிட்டது. யூகங்களின் அடிப்படையில் குழந்தை நந்திதாவின் மரணத்திற்கு பாலகுமார்தான் காரணம் என்று முடிவுக்கு வந்துவிட முடியாது. காஞ்சனா தனது இரண்டரை வயது குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். ஒருவேளை குழந்தை தப்பித்திருந்தால் காஞ்சனா கொலை வழக்கை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். எனவே, மனுதாரர் பாலகுமாருக்கு தண்டனை வழங்கி பிறப்பித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: